24 மணி நேரமும் குடிக்கலாம்! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்! திண்டாடும் வியாபாரிகள்!

அனைத்து வணிக நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்த நிலையில், இது குடிகாரர்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் மட்டுமே பயன்படும் என்று சிறு வியாபாரிகள் கொதிக்கிறார்கள். இப்போது பெரிய பெரிய மால்களும், ரிலையன்ஸ், மோர் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளும் தெருவுக்குத் தெரு முளைத்து வருகிறது. இந்த கடைகள் மட்டும்தான் இனி 24 மணி நேரமும் திறந்து வைக்க முடியும். அதனால் சின்னக் கடைகளில் நடைபெறும் கொஞ்சநஞ்ச வியாபாரமும் குறைந்துவிடும் என்று வியாபாரிகள் கோபமாகிறார்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ் கையேந்தி பவன்கள், டீக் கடைகள், சிறு மளிகை கடைகள், சின்ன ஹோட்டல்கள் இடம்பெற முடியாது. அதனால் இந்தக் கடைகள் அடைக்கப்பட்ட பிறகும் பெரிய பெரிய கடைகள் திறந்திருக்கும். இதுவரை பெரிய கடைகள் சீக்கிரமாக அடைக்கப்பட்டு, சின்னக் கடைகள் மிகவும் தாமதமாக அடைக்கப்படும். இதனால் வேலை முடித்து வரும் ஆண்களும் பெண்களும் இந்தக் குட்டிக் கடைகளில் வாங்குவார்கள். இனி அவர்க்ளும் அருகே இருக்கும் பெரிய கடைகளுக்குத்தான் ஜாலி ஷாப்பிங் செய்யத் தொடங்குவார்கள்.

24 மணி நேரமும் பார் திறந்து வைக்கப்படும் என்பதால், குடிமகன்களுக்குக் கொண்டாட்டம்தான். இதுபோன்ற இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும், அடித்தட்டு மக்களும்தான் அநியாயமாக பாதிக்கப்படுவார்கள் என்று சிறு வியாபாரிகள் கொதிக்கிறார்கள்.

அதுசரி, சின்ன வியாபாரிகள் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்றுதானே இப்படியெல்லாம் செய்கின்றன அரசுகள்.