2200 கோடி ரூபாயில் பிரமாண்ட கால்வாய்! திறந்து வைத்த 22 மணிநேரத்தில் தண்ணீரோடு போனது! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

கோனார் ரிவர் புராஜெக்ட் என்பது ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் கிரிடித்,போக்ரோ என்கிற இரண்டு மாவட்ட மக்களின் 42 ஆண்டுகால கனவு.


எழுபதுகளின் இறுதியில் இதற்கான திட்ட மதிப்பீடு 12 கோடியாக இருந்திருக்கிறது. திட்டம் நிறைவேற்றப் பட்டால் 62,955 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெரும்.85 கிராமங்கள் பலன் பெறும் என்று சொல்லப்பட்டது.ஒரு வழியாக 42 ஆண்டுகளுக்கு பிறகு திட்டப் பணிகள் துவங்கியபோது எஸ்டிமேட் 2176 கோடியாக எகிரிவிட்டது.

கால்வாய் பணி 2021ம் ஆண்டுவாக்கில் முழுமையாக நிறைவேறும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸுக்கு அத்தனை நாள் காத்திருக்க பொறுமை இல்லை.ஆன வரைக்கும் திறந்து வைப்போம் என்று முடிவு செய்தார்.ஹசரி பாக்கில் நடந்த விழாவில்,சரித்திரத்தில் இடம் பெறப்போகிறோம் என்கிற நம்பிக்கையில் கால்வாயை திறந்து வைத்தார்.

சரியாக 10 மணிநேரத்தில் வாய்க்காலில் ஆங்காங்கே உடைப்பெடுத்தது.22 மணி நேரத்தில் மொத்த வாய்க்காலையும் தண்ணீர் அடித்துக்கொண்டு போய்விட இப்போது ஜார்க்கண்ட் அரசியல் வாதிகள் அடித்துக் கொள்ளத் துவங்கி இருக்கிறார்கள்.வெள்ளத்தில் 35 கிராமங்களில் இருந்த வயல்கள் மொத்தமாக மண்மூடிப் போய்விட்டன.

அந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்கிறார் போகோடோன் தொகுதி எம்.எல்.ஏ நாகேந்திர மோட்டோ.இந்த பிஜேபி அரசு வீன் பெருமைக்காக இப்படி அரைவேக்காட்டு திட்டங்களை துவக்கிவைத்து,மக்களின் வரிப்பணத்தை வீனாக்குகிறது என்கிறார் அலோக் துபே. இதற்கிடையே எங்கே தவறு என்பதை கண்டு பிடிக்க ஒரு கமிட்டி அமைத்து இருக்கிறார் ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ்.

ஜார்கண்ட் நீர்பாசனத்துறை முதன்மைச் செயலாளர்,முதல்கட்ட விசாரணைக்கு பிறகு ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். கால்வாயின் காண்கிரீட் அல்லாத பகுதிகளில் இருந்த எலிவளைகளால் தான் வாய்க்கால் கரையுடைப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சுப்ரியா சொன்னதுபோல 22 மணி நேரத்தில் 2200 கோடியை தணீர் கொண்டு போய்விட்டது.காரணம் எலிகள் என்று கண்டுபிடித்து இருப்பதால் வசதியாகப் போய்விட்டது.அவையும் வெள்ளத்தில் மூழ்கி செத்திருக்கும் என்பதால் , எலிகளின் இந்தத் தற்கொலைப் படை தாக்குதலுக்கு யாரை தண்டிப்பார் ஜார்கண்ட் முதல்வர் என்று இனிமேல்தான் தெரியவரும்.