கைவிட்ட பெற்றொர்! விடா முயற்சியால் நர்ஸ் ஆன திருநங்கை! ஆனால் இப்போது வந்த புதுப் பிரச்சனை!

சென்னை: செவிலியர் பட்டப்படிப்பு முடித்த பிறகும் சரியான வேலை கிடைக்கவில்லை என்று திருநங்கை ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.


22 வயதான ரஷிகா ராஜ் கடந்த ஆண்டு, பிஎஸ்சி நர்ஸிங் படிப்பை முடித்து, பட்டம் வாங்கினார். ஆனால், அவர் ஒரு திருநங்கை ஆவார். நாட்டிலேயே நர்ஸிங் படிப்பில் பட்டம் வென்ற முதல் திருநங்கை இவர்தான். பத்மஸ்ரீ காலேஜ் ஆஃப் நர்ஸிங்கில் படித்த அவர், தமிழக ஆளுநரின் கையால் பட்டமும் வாங்கினார்.

செங்கல்பட்டை சேர்ந்த ரஷிகா, பட்டம் வாங்கி ஓராண்டு கடந்த நிலையில், இதுவரை எந்த வேலையும் கிடைக்காமல் அல்லாடுகிறார். இவரை இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்யஸ்ரீ ஷர்மிளா தத்தெடுத்து வளர்த்து வருகிறார். '

'நான் திருநங்கை என்பதால், எனது பெற்றோர் என்னை நிராகரித்துவிட்டனர். வேறுவழியின்றி சத்யஸ்ரீ அம்மாவின் உதவியால் வளர்ந்து, பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளேன். ஆனால், இதுவரை செவிலியர் படிப்பு தொடர்பாக, எந்த வேலையும் கிடைக்கவில்லை.

தற்சமயம், என்ஜிஓ சார்பாக, எச்ஐவி நோய்த்தொற்று தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். என் படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்து வருகிறேன். ஆனால், திருநங்கை என்பதால், செவிலியர் பணி கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

அரசு மருத்துவமனையில் ஏதேனும் செவிலியர் பணி கிடைத்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும். என்னை பார்த்து மேலும் பல திருநங்கைகள் செவிலியர் படிப்பு படிக்க, இது ஊக்கமாக அமையும்,'' என்று  ரஷிகா ராஜ் குறிப்பிடுகிறார். அவரின் வேண்டுதல் நிறைவேறட்டும்....