சாலையில் உயிருக்கு போராடிய நல்ல பாம்பு..! பிடித்து 22 தையல் போட்டு காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்! எங்கு தெரியுமா?

5 அடி நீளமுள்ள நல்ல பாம்புக்கு அறுவை சிகிச்சை! திருவண்ணாமலையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!


சாலையை கடக்க முயன்ற 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அடிபட்ட நிலையில் மெதுவாக ஊர்ந்து சென்றதை கண்ட பொதுமக்கள் பாம்பை பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்து பாம்புக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை- போளூர் சாலை இடையே ஈசான்யலிங்கம் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள நகராட்சி பொது கழிவறை அருகே சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அடிபட்ட நிலையில் சாலையை கடக்க மெதுவாக ஊர்ந்து சென்றது.

மெதுவாக ஊர்ந்து சென்ற பாம்பை கவனித்த பொதுமக்கள் திருவண்ணாமலை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்த அப்பகுதிக்கு வந்த பாதுகாவலர்கள் ராஜேஷ் மற்றும் பாலாஜி இருவரும் இணைந்து 5 அடி நல்ல பாம்பை மீட்டனர்.

இந்நிலையில், பாம்பை, திருவண்ணாமலை- செங்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நல்ல பாம்புக்கு அடிபட்ட இடத்தில் 22 தையல் போடப்பட்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக நல்ல பாம்பை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. பாம்பை காப்பாற்றிய இந்த சம்பவம் திருவண்ணாமலை மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.