மகளை பின்தொடர்ந்து சில்மிஷம்! பொருக்கித்தனம் செய்த இளைஞனை வெட்டி வீசிய தந்தை! நெல்லை பரபரப்பு!

மகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததால் ஆத்திரமடைந்த தந்தை இளைஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவமானது சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட டி. இராமநாதபுரம் என்ற இடத்தில் ஜெயக்குட்டி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்ற 21 வயது இளைஞர் அந்த பெண் மீது ஒருதலை காதல் கொள்கிறார்.

இதனால் அந்த இளம் பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். சில நாட்களுக்குப் பின்னர் இவற்றை அறிந்த ஜெயக்குட்டி கண்ணனின் தாயிடம் சென்று நிகழ்ந்தவற்றை கூறி கண்டித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திலும் கண்ணனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

இவ்வளவு செய்தும் கண்ணன் தொடர்ந்து ஜெயக்குட்டியின் மகளை கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் ஜெயக்குட்டியின் மகளால் படிப்பில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை. இதனால் ஜெயக்குட்டி மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளார். நேரடியாக சென்று கண்ணனை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

கோபம் தலைக்கேறியதால் ஜெயக்குட்டி தன்னிடமிருந்த அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயக்குட்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சங்கரன்கோவில் அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.