பல ஆண்டுகளாக வயிற்றில் வலி! பரிசோதித்த டாக்டர்கள்! சினைப்பையில் இருந்த 20 கிலோ கட்டி! அதிர்ந்த பெண்மணி!

சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்து 20 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரதி 51 , இவருக்கு பல ஆண்டுகளாகவே வயிற்று வலி இருந்து வந்துள்ளதாக தெரிகிறது .இந்நிலையில் சாதாரண வயிற்று வலி தான் எனக்கூறி அவரும் மருத்துவமனைக்குச் சென்று மருந்துகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். பின்னர் அவரது வயிறு வீங்க ஆரம்பித்துள்ளது.இதையடுத்து அவர் அதை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இதையடுத்து வயிற்றுவலி கடுமையாகவே அவர் சென்னையில் உள்ள எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது சினைப்பையில் கட்டி இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர் ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி அவரது சினைப்பையில் இருந்த சுமார் 20 கிலோ கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.

தற்போது ரதி நலமாக உள்ளதாகவும் தொடர்ந்து அவருக்கு வயிற்றில் கட்டி ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது வயிற்றிலிருந்து வெளியே எடுத்த கட்டியை புற்றுநோய் பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள புற்று நோய் பிரிவில் பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவப்பிரிவின் தலைவர் சீதாலட்சுமி பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அல்லது மரபணு மாற்றத்தின் காரணமாக வயிற்றில் இந்த மாதிரியான கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அதை இவ்வளவு நாட்கள் தள்ளிப் போடாமல் விரைவிலேயே அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தால் எந்த ஒரு ஆபத்தும் வராது எனவும் தெரிவித்துள்ளார்.