209 போதுமா எடப்பாடியாரே? வேலூரில் போர் நடக்கப்போகிறதா?

ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற இருக்கும் வேலூர் தொகுதியில்தான் அத்தனை கட்சிகளும் இருக்கின்றன.


புத்திசாலித்தனமாக கமல்ஹாசனும் தினகரனும் போட்டியில் இருந்து விலகிவிட்ட நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. நாம்தமிழர் ஆகிய மூன்று கட்சிகளின் போட்டி நடக்கிறது.

இந்தத் தொகுதியை எப்படியும் வென்றே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் 71 பேர் கொண்ட தேர்தல் குழுவை தி.மு.க. நியமனம் செய்தது. துரைமுருகன் மூலம் ஜாதியினரையும், பிற கட்சியினரையும் சரிக்கட்டும் வேலைகள் ஒருபுறம் நடக்கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதையொட்டி, நேரடியாக அ.தி.முக.வினர் தேர்தல் களத்தில் குதிக்க இருக்கிறார்கள். அதனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் கேசி வீரமணி , எம்எல்ஏ ரவி மேற்பார்வையில் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பாளர்கள் வருகிற 22-ம் தேதி காலை முதல் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றுவார்களாம். அடேங்கப்பா... எண்ணிக்கையைப் பார்த்தா போருக்குப் போற மாதிரி தெரியுதே...