உலகை வழி நடத்தும் தலைவன் சுந்தர் பிச்சை! பச்சை தமிழனுக்கு சர்வதேச விருது!

வாஷிங்டன்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை 2019ம் ஆண்டிற்கான குளோபல் லீடர்ஷிப் என்ற விருதை பெறுகிறார்.


பிறப்பால் தமிழரான சுந்தர் பிச்சை தற்போது கூகுள் சிஇஓ.,வாக ஜொலித்து வருகிறார். இந்நிலையில்தான் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக்கின் தலைவராக உள்ள ஏடனா ஃபிரைட்மேனுக்கும், குளோபல் லீடர்ஷிப் விருது தரப்படுவதாக, அமெரிக்கா - இந்தியா பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) கூறியுள்ளது. 

இந்தியா மற்றும் அமெரிக்காவின் தொழில் பணிகளில் அதிக முன்னேற்றம் ஏற்பட இவர்கள் முக்கிய காரணமாக உள்ளதால், இந்த விருதுகள் அளிக்கப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 12, 13ம் தேதிகளில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸில் நடைபெறும் யூஎஸ்ஐபிசி இந்தியா ஐடியாஸ் மாநாட்டில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளதாக, யூஎஸ்ஐபிசி குறிப்பிட்டுள்ளது. 

இதுபற்றி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், ''இந்தியாவில் வளர்ந்த நான், தொழில்நுட்ப உதவியுடன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களின் வளர்ச்சியில் பங்களிப்பை கூகுள் மூலமாக மேற்கொண்டதற்கு, பெருமையடைகிறேன்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.