EXIT POLL! 10 வருட வனவாசம் முடிகிறது! விஸ்வரூபம் எடுக்கிறார் ஸ்டாலின்!

பத்து வருடங்களுக்கு பிறகு தமிழக தேர்தல் களத்தில் திமுக வெற்றிக்கொடி நாட்ட உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. வரும் 23. ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அனைத்து முன்னணி ஊடகங்களும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்து கணிப்புகளிலும் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டது. இதே நிலைதான் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிலும் காணப்படுகிறது.

இந்தியா டுடே - ஆக்சிஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் 38 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோலத்தான் நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் என்டிடிவி உள்ளிட்ட ஊடகங்களும் தமிழகத்தில் அதிக இடங்களில் அதாவது 35க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் என்று கணித்துக் கூறியுள்ளன.

இதன் மூலம் ஸ்டாலின் தலைமையிலான திமுக தமிழக அரசியலில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க உள்ளது. கடைசியாக கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் திமுக வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட திமுக இழக்க நேரிட்டது. பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுகவால் வெற்றி பெற முடியவில்லை.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதற்கான சூழல் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.