எம்பி தேர்தலில் டிடிவி கட்சிக்கு இத்தனை இடங்களா? வெளியானது ரிப்ஸ் கருத்துக் கணிப்பு!

ரிப்ஸ் சர்வே என்ன சொல்லுது? தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போறது யாரு?


கருத்துக்கணிப்பியலின் தந்தை என்று கருதப்படும் பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகத்தின் பெயரால் செயல்படும் ராஜநாயகம் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீப்பிள் ஸ்டடீஸ் என்ற ரிப்ஸ் நிறுவனம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு அதிக தொகுதிகள் என்ற சர்வே வெளியிட்டுள்ளது.

தொகுதிக்கு 240 பேர் என்று 39 தொகுதிகளிலும் சர்வே நடத்தப்பட்டதாக சொல்லப்படும் அந்த நிறுவனத்தின் முடிவு என்ன தெரியுமா?

நாடாளுமன்றத்துக்கு வாக்களிப்பவர்களில் 40.1% தி.மு.க.வுக்கும், 39.7% அ.தி.மு.க.வுக்கும் வாக்களிக்க இருக்கிறார்களாம். இதில் அ.ம.மு.க.வுக்கு 9.2% வாக்குகள் கிடைக்குமாம். அந்த வகையில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிவிக்கிறது ரிப்ஸ்.

பெரும்பாலான மக்கள் சாதி மற்றும் பணத்தைப் பார்த்து தேர்தலில் வாக்களிப்பதாகவும், வேட்பாளரின் தகுதி, திறமையைப் பார்த்து 6.7 சதவீதம் பேர் மட்டுமே வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அதுசரி, எத்தனை தொகுதி கிடைக்கும் என்ற கேள்விக்கு, ரிப்ஸ் கொடுத்திருக்கும் எண்ணிக்கை தெரிந்தால் அதிர்ந்தே போவீர்கள்.

ஆம், தி.மு.க. அணிக்கு 4 முதல் 37 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும் அ.தி.மு.க.வுக்கு 2 முதல் 35 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக அ.ம.மு.க.வுக்கு பூஜ்யத்தில் இருந்து ஐந்துக்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்குமாம்...

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அ.தி.மு.க. அணிக்கு 36.5% வாக்குகளும், தி.மு.க. அணிக்கு 35.7% வாக்குகளும், அ.ம.மு.க.வுக்கு 14.4% வாக்குகளும் கிடைக்கிறதாம். இடைத்தேர்தலில் எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பதவிக்கு வரும் என்று 34.7% பேரும், தற்போதைய ஆட்சியே தொடரும் என்று 33.1% பேரும் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி மொக்கையா ஒரு சர்வே நாட்டுக்குத் தேவையா ரிப்ஸ்..? இந்த லட்சணத்துல கருத்துக்கணிப்பியலின் தந்தையாமே..?