2018 சிறந்த புதுமுக நடிகர், நடிகை விருது பட்டியல் இதோ…

டைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம் ஆண்டுக்கு விருதுபெறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. இந்த விருதுக் கலைஞர்களை தேர்வுசெய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.


தேர்வுக்குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் 30ம் தேதி விருது பெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். இன்று 2018ம் ஆண்டுக்கான சிறந்த புதுமுக நடிகர், நடிகையர் யார் என்பதைப் பார்க்கலாம்.

சிறந்த புதுமுக நடிகைக்கு ஏகப்பட்ட போட்டி. பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய்பல்லவி, இந்த ஆண்டுதான் தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் அட்டு அவுட் என்றாலும் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ரைசா இந்த ஆண்டு பியார் பிரேமா காதல் படத்தில் அறிமுகமானார். கோலமாவு கோகிலா படத்தில் நயந்தாராவின் தங்கையாக நடித்து மனதை அள்ளியிருந்தார் ஜாக்லின்.

அதேபோன்று நடிகர்களிலும் பஞ்சமில்லை. ஏகப்பட்ட பேர் அறிமுகமானார்கள். குப்பைக் கதையின் மூலம் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அறிமுகமானார். 96 படத்தின் சின்ன வயது விஜய் சேதுபதியாக வந்து கலக்கியிருந்தார் ஆதித்யா பாஸ்கர்.


இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிடும் வகையில் நோட்டா படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்திருந்தார் விஜய் தேவரகொண்டா. இவரது அறிமுகம் ஒரு அதிரடி என்றால் அமைதிப் புயலாக வந்து மனதை அள்ளியிருந்தார் மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் நாயகன் ஆண்டனி. ஒரே ஒரு இடத்தில்கூட நடிக்கிறார் என்பது தெரியாத அளவுக்கு இயல்பாக வாழ்ந்திருந்தார்.

காலா படத்தில் அறிமுகமான அஞ்சலி பட்டேல் சிறந்த புதுமுக நாயகிக்கு கடுமையான போட்டி கொடுப்பவராக வந்து நிற்கிறார். படத்தில் காதலுக்கும் போராட்டத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அதேபோன்று சிறந்த புதுமுக நடிகை போட்டிக்கும் மல்லுக்கட்டுகிறார். இவருக்கு முன்பே ஒரு பூ போல் நின்று போட்டி போடுகிறார் கவுரி. இவரை கவுரி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. குட்டி ஜானு என்று சொன்னால் சட்டென்று மனதுக்குள் வந்துவிடுவார். 96 படத்தில் சின்ன வயது த்ரிஷாவாக வந்து அத்தனை பேர் மனதிலும் காதல் விதை தூவிய இளம் கவிதை கவுரி.

அதன்படி 2018ம் ஆண்டு சிறந்த புதுமுக நடிகை விருதுக்குப் போட்டியிடும் வகையில் அஞ்சலி பட்டேலும் கவுரியும் களத்தில் இருக்கிறார்கள். சிறந்த புதுமுக நடிகருக்கான போட்டியில் விஜய் தேவரகொண்டாவும், மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனியும் களத்தில் இருக்கிறார்கள்.

ஆக, 2018ம் ஆண்டு சிறந்த புதுமுக நடிகைக்கான டைம்ஸ் தமிழ் விருதை பெறப்போவது அஞ்சலி பட்டேலா அல்லது கவுரியா என்பதையும், சிறந்த புதுமுக நடிகர் விஜய் தேவரகொண்டாவா அல்லது ஆண்டனியா என்பதையும்  டிசம்பர் 30 அன்று அறிந்துகொள்ளுங்கள்.