நித்தியானந்தா ஆசிரமத்தில் அடுத்த மர்மம்! திருச்சி பெண் கொடூர கொலை என பகீர் புகார்! கதறும் உறவினர்கள்!

நித்தியானந்தா ஆசிரமத்தில் 2014ம் ஆண்டு மர்ம முறையில் மகள் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், ஆசிரமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூனன், ஜான்சிராணி தம்பதியின் மகள் சங்கீதா என்பவர் 2010ம் ஆண்டு பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்தில் தியான வகுப்பில் சேர்ந்தார். அவருக்கு அங்கேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் 2014 டிசம்பர் மாதம் சங்கீதா மர்மமுறையில் உயிரிழந்தார். 

ஆசிரமத்தில் மகளை துன்புறுத்தி கொலை செய்துவிட்டதாக பெற்றோர் தொடர்ந்த வழக்கில் 2015 ஜனவரி மாதம் சங்கீதா உடல் மறு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மகள் உயிரிழந்த மனஉளைச்சலில் இருந்த தந்தை அர்ஜூனன் உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையே மகள் சங்கீதா உயிரிழந்த வழக்கை போலீசார் கிடப்பில் போட்டுள்ளதாகவும் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் சங்கீதாவின் தாய் ஜான்சிராணி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆசிரமத்தில் பெண்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவதாகவும் இன்னொரு கொலை நடப்பதற்குள் ஆசிரமத்தில் இருந்து அனைத்து பெண்கள், குழந்தைகள் மீட்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா ஆசிரமம் மீது கடந்த காலங்களாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. போலீசாரும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை தேடி வருகின்றனர். நித்தியானந்தாவின் ஒட்டு மொத்த ஆசிரமங்களிலும் அதிரடி ரெய்டு நடத்தி அனைவரையும் மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். விஜய்மல்லையா, நீரவ் மோடி வரிசையில் நித்தியானந்தாவையும் கடைசி வரை பிடிக்காமலேயே போய்விடுமோ என்ற அச்சம் பாதிக்கப்படும் மக்களுக்கு வந்துள்ளது.