இனிமேல் 2,000 ரூபாய் நோட்டு செல்லாதா? ரிசர்வ் பேங்க் சொல்வதைக் கேளுங்க!

இப்போது நான்கு பேர் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வது 2,000 ரூபாய் நோட்டு விவகாரம் பற்றித்தான்.


எந்த நேரமும் செல்லாதுன்னு சொல்லப் போறாங்களாம், அதனாலே முன்கூட்டியே 2,000 ரூபாய் நோட்டு இருந்தால் மாற்றிக்கொள் என்று பேசுகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பணம் வைத்திருந்ததை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்ட அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது.

செல்லாது என்று அறிவிக்க இருப்பதால்தான் 2,000 நோட்டுகள் இப்போது ஏ.டி.எம். மெஷினில் வருவதில்லை என்றும் சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்று கள்ளநோட்டு பெருகிவிட்டதாகச் சொல்கிறார்கள். திடீரென பாகிஸ்தானில் இருந்து ஏராளமான 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 

சமீபத்தில் இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட நேரத்தில், கடந்த ஆண்டு 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமும் 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு முடிவுரை எழுதப்படுவதாக கூறப்படுகிறது.  

இப்போது 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்படும் திட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இன்னும் சில தினங்களில் 2,000 நோட்டு கொடுத்தால் வாங்கமுடியாது என்று கடைக்காரர்கள் சொல்லும் நிலைமை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டும் உண்மை.