ஓட்டுக்கு ரூ.2000! டிடிவி தினகரன் பாணியில் வாக்காளர்களுக்கு டோக்கன்! இடைத் தேர்தல் பரபரப்பு!

இடைத்தேர்தல் நடைபெறும் சென்னை பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கான லோக்கல் விநியோகிக்கப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை பெரம்பூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலும் அதிமுக சார்பில் மதுசூதனனின் நெருங்கிய ஆதரவாளரான ராஜேஷ் என்பவர் போட்டியிடுகின்றனர்.

பெரம்பூர் தொகுதியில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பிற்பகலுக்குப் பிறகு வாக்குப்பதிவில் விறுவிறுப்பு மேலும் கூடியது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருந்தனர்.

அப்போது திமுக மற்றும் அதிமுக வினர் திரண்டு வாக்குச்சாவடிகளுக்கு முன்பு அதிகாரிகளிடம் பிரச்சனையை ஆரம்பித்தனர். அதிமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் ஒன்றை கொடுத்து ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறி வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அதுமட்டுமல்லாமல் அதிமுகவினர் விநியோகிக்கும் டோக்கன் என்று கூறி சில ஆவணங்களையும் அவர்கள் போலீசாரிடம் கொடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த டோக்கன்கள் அதிமுகவினர் கொடுத்தது என்பது உறுதியானது. இதுகுறித்து விசாரித்த போது அந்த டோக்கன் வாக்காளர் களுக்கு கொடுக்கப்பட்டது அல்ல என்றும் அதிமுகவினர் தேர்தல் வேலை பார்த்தவர்களுக்கு சாப்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட டோக்கன் என்றும் கூறி அதிமுகவினர் சமாளித்து உள்ளனர்.

ஆனால் ஆர்கேநகர் தேர்தலில் டிடிவி தினகரன் 20 ரூபாய் கொடுத்து ஏமாற்றியது போல இப்படி ஒரு டோக்கன் கொடுத்து பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் வாக்காளர்களை ஏமாற்றுவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.