அம்மா மினி கிளினிக் இருக்க கவலை எதற்கு… இந்த மாதத்திற்குள் 2000 கிளினிக் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி.

கடந்த 14ஆம் தேதி சென்னையில் அம்மா மினி கிளினிக் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் சென்று அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நடத்திவருகிறார்.


இந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு அம்மாவின் அரசு அறிவித்த 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் சேலத்தில் கொண்டலாம்பட்டியிலும், லந்துவாடியிலும் திறந்துவைத்து பேசினார்.

கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அந்தப் பகுதியிலேயே, முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவங்குகின்றபோது, அவர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனே அம்மா மினி கிளினிக்கை நாடி தங்களுடைய நோய்களை குணப்படுத்திக் கொள்வதற்கு இங்கேயே ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இருந்து, அங்கு வருகின்ற நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள். 

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கிலும் வைக்க வேண்டுமென்ற உத்தரவை வழங்கியுள்ளோம். எனவே, கிராமத்தில் வாழ்கின்ற குறிப்பாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துவங்க வேண்டுமென்று உத்தரவை வழங்கியிருக்கின்றோம். 

கிராமங்கள் சூழ்ந்த பகுதி இந்தப் பகுதி. இரவு, பகல் பாராமல் நிலத்திலே உழைக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளிகள் நிறைந்த பகுதி ஆகும். நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். இன்றைக்கும் நான் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். வெயிலிலும், மழையிலும் நனைந்து இரத்தத்தை வியர்வாக மண்ணிலே சிந்தி உழைக்கின்ற வர்க்கம் விவசாய வர்க்கம், விவசாயத் தொழிலாளி.

அப்படிப்பட்ட உழைக்கும் வர்க்கத்திற்கு, இந்த நாட்டுக்கு உணவு அளிக்கின்ற விவசாயி, விவசாயத் தொழிலாளிகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காகத் தான் இந்த முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் துவக்கியிருக்கின்றோம். 

இதன்மூலம், இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், சிறிய நோய்கள் ஏற்படின் இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்ற சூழ்நிலை ஏற்பட்டால் இங்கிருக்கின்ற மருத்துவர்கள் பரிசோதனை செய்து தாலுகா மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ அனுப்பி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, குணமடையச் செய்வோம். 

இது மட்டுமல்ல. நடமாடும் மருத்துவக் குழுவும் வைத்திருக்கின்றோம். நோய் அதிகமாக இருக்கிறது என்று கண்டறியப்படும் கிராமங்களுக்கு அந்த மருத்துவக் குழு சென்று, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்யக்கூடிய நிலையை அம்மாவினுடைய அரசுதான் உருவாக்கித் தந்திருக்கின்றது. எனவே யாரும் உடல்நிலை குறித்து அச்சப்பட அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.