தொழிலதிபரின் வீட்டில் இருந்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமானது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற தொழில் அதிபர்! தேனியில் உள்ள அவர் வீட்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இந்த கோகுலகிருஷ்ணன் என்ற தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் 3 நாட்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு சென்றுள்ளார்.
அப்பகுதியில் உள்ள கொள்ளையர்கள் இவருடைய வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துள்ளனர். நேற்று நள்ளிரவு கோகுலகிருஷ்ணன் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அவருடைய பீரோவை உடைத்து 200 சவரன் நகைகளையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் திருடி சென்றுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்தவுடன் காவல்துறையினர் தொழிலதிபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். மோப்ப நாய் உதவியுடன் அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.
அவருடைய வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பது காவல்துறையினருக்கு கடினமாக அமைந்துள்ளது. பின்னர் திருப்பதி சென்ற கோகுலகிருஷ்ணனிடம் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் விலை மதிப்பான பொருட்களை வைத்து விட்டு ஊருக்கு செல்லும்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திவிட்டு செல்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.