பெண்ணும் வேண்டும்..! அவள் மூலமாக பணமும் வேண்டும்..! காதலியை இன்னொருவனுக்கு மனைவியாக்கி காதலன் செய்த தகாத செயல்!

கன்னியாகுமரி: 100 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு காதலனோடு மாயமான அரசு அதிகாரியின் மனைவிக்கு போலீசார் வலைவீசிவருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் வேல்முருகன். கடந்த நவம்பர் 24ம் தேதி அவர், பரசேரி பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீயை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 16ம் தேதி ராஜஸ்ரீயை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

அவருக்கு கட்டிய தாலி மட்டும் வீட்டின் ஓரிடத்தில் கழற்றி வைக்கப்பட்டிருந்தாகவும், திருமணத்திற்கு கிடைத்த வரதட்சணை மற்றும் அன்பளிப்பு என மொத்தம் 100 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், 2 செல்ஃபோன்களுடன் சம்பந்தப்பட்ட ராஜஸ்ரீ மாயமாகிவிட்டாராம்.  

இதுபற்றி போலீசில் புகார் செய்தபோதுதான் உண்மை தெரியவந்தது. ராஜஸ்ரீ தனது அண்டை வீட்டில் வசிக்கும் சந்தோஷ் என்பவரை காதலித்து வந்ததாகவும், அந்த நபரோ வேலைக்குச் செல்லாமல் உல்லாசமாக ஊர் சுற்றுபவர் எனவும் கூறப்படுகிறது. எனவே, வசதி படைத்த ஒருவரை திருமணம் செய்துவிட்டு, திருமணத்திற்கு சேரும்  வரதட்சணை நகைகள், பணத்தை எடுத்துக் கொண்டு, இருவரும் எஸ்கேப் ஆகிவிடலாம் என்று சந்தோஷ், ராஜஸ்ரீக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.

அதன்படியே, ராஜஸ்ரீயும் அரசு அதிகாரி வேல்முருகனை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார். திருமணம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே தக்க சந்தர்ப்பம் எதிர்பார்த்து, நகைகள், பணத்தை அபேஸ் செய்துகொண்டு, காதலனுடன் ராஜஸ்ரீ ஓடிவிட்டார். மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.