புதுடெல்லியில் 36 முறை குத்தப்பட்ட பின்னர் இறந்து போன 20 வயது நர்ஸ் உட்பட 2 முதியவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வயது நர்ஸ் உடலில் 36 இடங்களில் குத்து காயம்! மிரள வைத்த கொடூர கொலை!

புதுடெல்லியில் வசந்த் விஹார் என்னும் பகுதியில் விஷ்ணு மாத்தூர் மற்றும் சாஷி மாத்தூர் என்ற வயதான தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை கவனித்து கொள்வதற்காக 20 வயது மதிக்கத்தக்க நர்ஸ் ஒருவரை பணியில் சேர்த்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் மர்ம நபர்கள் இவர்களுடைய வீட்டிற்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு விஷ்ணு மற்றும் சாஷியை தாக்கியுள்ளனர். ஒரு ஆயுதமானது ஐஸ்-பிக் என்றும், மற்றொன்று ஸ்க்ரூட்ரைவர் ஆக இருக்க கூடும் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவத்திற்காக பணியமர்த்தப்பட்ட 20 வயதுப் பெண்ணின் பெயர் குஷ்பூ என்பதாகும். இவரையும் இரண்டு ஆயுதங்களையும் கொண்டு சுமார் 36 முறை குத்தியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுவரை 50 பேரிடம் விசாரணை நடத்தியும் எந்தவித துருப்புச்சீட்டும் கிடைக்கவில்லை. குஷ்புவின் நண்பர்கள் முதல் பிளாட்டில் தங்கியிருக்கும் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் கண்டனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 1:45 மணிக்குள், அந்த பிளாட்டிற்கு ஆறு இரு சக்கர வாகனங்கள் வந்துள்ளன. ஆனால் அவர்களின் நம்பர் பிளேட் காட்சிகளில் பதிவாகவில்லை. மேலும் இந்த சமயத்தில் தான் இறந்து போனவர்களின் கைப்பேசியும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது என்று காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.