டாஸ்மாக் கடைகளை மூடியும் முழு போதை..! சாலையில் வந்த இளைஞர்களை அங்கப்பிரதட்சனம் செய்ய வைத்த போலீஸ்! எங்கு தெரியுமா?

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடித்து வரும் நிலையில் மதுபோதையில் இளைஞர்கள் வெளியே திரிந்த சம்பவமானது தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 24,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 5,30,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனால் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்திலும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சட்ட ஒழுங்கு காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் மீறாமல் இருப்பதற்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசிக்கு அருகில் அமைந்துள்ள சங்கரன்கோவிலில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அச்சமின்றி 2 இளைஞர்கள் குடிபோதையில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுக்கு நூதனமான தண்டனையை வழங்கினர். அதாவது சாலையில் படுத்து முன்னும் பின்னும் உருள வேண்டும், உருளும் போது "இனிமேல் குடிப்பதற்காக வெளியே வர மாட்டேன்" என்று கூறிக்கொண்டே உருண்டு புரண்டனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.