குழந்தை பெற்ற பச்சை உடம்பு பெண்களுக்கு கட்டாந்தரையில் படுக்கை..! செங்கல்பட்டு அவலம்!

மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் தரையில் படுத்திருக்கும் செய்தியானது செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கும் போதுமான வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிரசவ வார்டுகளில் படுக்கை எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே உள்ளதாகவும், குழந்தை பெற்றெடுத்த பின்னர் சிகிச்சை அளிக்கும் போது 2 பேருக்கு ஒரே படுக்கை அளிக்கப்படுவதாக நோயாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் தரையில் பெட்ஷீட் போட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதால் அவர்களுக்கு காய்ச்சல், ஜன்னி போன்ற தொற்றுநோய் அதிகளவில் ஏற்படுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். பிரசவ வார்டுகளில் உடனடியாக போதிய அளவிற்கு படுக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு சுகாதாரத்துறை செயலரான பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் சில அதிகாரிகள் இன்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சல் வார்டு, பிரசவ வார்டு ஆகிய பகுதிகளை பீலா ராஜேஷ் சோதனையிட்டார். 

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறுகையில், மருத்துவமனைக்கு தேவையான சுகாதார வசதிகளையும் படுக்கை வசதிகளையும் விரைவில் மேம்படுத்த போவதாகவும் மருத்துவமனைக்கு வருவதற்கான சாலை வசதிகளையும் விரைவில் சீர் செய்யப்போவதாகவும் கூறினார்.

அதிகாரிகளின் வருகையானது இன்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.