சென்னையில் பத்திரிகையாளர்கள் 2பேரை தாக்கியது கொரோனா..! நியூஸ் சேனல்கள் அதிர்ச்சி!

சென்னையில் பத்திரிகையாளர்கள் இரண்டு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வகையில் இன்று கொரோனா வைரஸ் தொற்றினால் சென்னையில் பத்திரிகையாளர்கள் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் ஒருவருக்கும், தனியார் செய்தித்தாள் நிருபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 24 வயதான இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இவரது தந்தை கொரோனா பரிசோதனை செய்து கொண்டதால் கடந்த 15ஆம் தேதி அவரது மகனும் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சுகாதாரத் துறை அதிகாரிகள் இவரது வீட்டிற்கு வந்து உங்களுக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்து அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவரோடு அலுவலகத்தில் தொடர்பில் இருந்த நபர்களையும் ஆராய்ந்து அவர்களையும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

அதேபோல சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து தனியார் பத்திரிகையில் நிருபராக பணியாற்றிவரும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டிவி சேனல்கள் மற்றும் அதில் வேலை செய்யும் பத்திரிகையாளர்கள் பெரும் பீதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.