கோவிலில் கல்யாணம்! கட்டிய தாலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்! காரணம் இது தான்..!

பாதுகாப்பு கருதி 2 காதல் ஜோடிகள் வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை காணப்பாடி ராமநாதபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள மில்லில் சிவபாண்டி என்ற 21 வயது இளைஞர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரும் இதே ஊரை சேர்ந்தவராவார். அந்த மில்லில் சுக்கம்பட்டியை சேர்ந்த முத்துமணி என்ற 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்தார். 

அப்போது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி வடமதுரை காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். 

இரு தரப்பினரையும் அழைத்த காவல்துறையினர் சமாதானம் பேசி புதுமண தம்பதிகளை அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வாழக்காய்ப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்த இளைஞரும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும்  ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வட மதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த காதல்ஜோடி வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் என்பதால், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

இந்த இரு சம்பவங்களும் வடமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.