தந்தையால் ஆற்றில் வீசப்பட்ட பெண் குழந்தை! கண்டுபிடிக்க முடியாததால் தாய் எடுத்த விபரீத முடிவு!

ஆற்றில் வீசப்பட்ட மகளை கண்டுபிடிக்க இயலாததால் வேதனை அடைந்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் எனுமிடம் அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள பத்தடிபாலம் என்னும் இடத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய வயது 35. இவர் ஒரு கூலித்தொழிலாளியாவார். இவருடைய மனைவியின் பெயர் ரேணுகாதேவி. இத்தம்பதியினருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். 

இவர்களுடைய பெயர்கள் ஷோபனா (13), லாவண்யா (11), ஹரீஸ்(9), ஸ்ரீமதி(7), குணசேகரன்(5) என்பன ஆகும். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

17-ஆம் தேதியன்று பாண்டி மதுபோதையில் தன்னுடைய மகள்களான லாவண்யா மற்றும் ஸ்ரீமதியை அழைத்து சென்றுள்ளார். மனைவியின் மீது கடுமையான ஆத்திரத்திலிருந்த பாண்டி 2 குழந்தைகளையும் அரசலாற்றில் வீசியுள்ளார். 

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், சில இளைஞர்களை வரவழைத்து ஆற்றில் வீசப்பட்ட 2 குழந்தைகளையும் கடுமையாக தேடி வந்தனர். சில மணி நேரத்திலேயே லாவண்யாவை மீட்டு கரை சேர்த்தனர். ஆனால் ஸ்ரீமதியை 3 நாட்களாக தேடி வந்தும் கண்டுபிடிக்க இயலவில்லை.

அதனால் ரேணுகாதேவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இன்று மாலை திடீரென்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது விரைந்து வந்த பொதுமக்கள் ரேணுகாதேவியை காப்பாற்றினர்.

சில தீ காயங்கள் ஏற்பட்டதால், அவரை கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே மாயமான குழந்தையை 4-வது நாளாக மீட்பு படையினரும் பொதுமக்களும் விரைந்து தேடி வருகின்றனர். 

இந்த சம்பவமானது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.