2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் பிரிக்கப்படுவது ஏன் தெரியுமா? மோடி – அமித் ஷாவின் ராஜதந்திரம்!

யாரும் எதிர்பாராத வகையில் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதோடு மட்டும் அல்லாமல் அந்த இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக மோடி – அமித் ஷா அறிவித்திருப்பது மிகப்பெரிய ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


கடந்த ஒரு வார காலமாகவே காஷ்மீர் ஏன் பதற்றமாக இருந்தது என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. திடீரென 30 ஆயிரம் கூடுதல் படை வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட போது பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதோடு மட்டும் அல்லாமல் அதன் பிறகும் கூடுதலாக தினந்தோறும் படைகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.

இதற்கு காரணம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்யப்போவது தான் என்கிற தகவல் கசிந்தது. அதோடு மட்டும் அல்லாமல் காஷ்மீரை மூன்றாக பிரித்து காஷ்மீர், ஜம்முவை தனி மாநிலங்களாகவும், லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாகவும் பரபரப்பு பற்றிக் கொண்டது.

ஆனால் இந்திய அரசியல் அமைப்பின் 370வது பிரிவின் படி மத்திய அரசால் காஷ்மீர் எல்லையை சுருக்கவோ அதிகரிக்கவோ முடியாது. அதற்கு காஷ்மீர் சட்டப்பேரவையில் அனுமதி அவசியம். அதே சமயம் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தால் காஷ்மீரின் எல்லையை மாற்றி அமைக்க முடியும். இப்படியான சூழலில் தான் அமித் ஷா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதோடு மட்டும் அல்லாமல் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கப்போவதாகவும் அறிவித்தார் அமித் ஷா. காஷ்மீர் மற்றும் ஜம்மு ஒரு பிராந்தியமாகவும், லடாக் மற்றொரு பிராந்தியமாகவும் பிரிக்கப்படும் என்று அறிவித்த அமித் ஷா உடனடியாக அந்த இரண்டுமே இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இருக்கும் என்று கூறியது தான் இந்த விவகாரத்தில் பயங்கர ட்விஸ்ட்.

ஏனென்றால் மாநிலமாக பிரித்தால் கூட தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அங்கு சட்டப்பேரவை மூலமாக உரிமைகள் இருக்கும். ஆனால் யூனியன் பிரதேசம் என்றால் அதிகாரம் அனைத்துமே மத்திய அரசிடம் குவிந்திருக்கும். அனைத்திற்கும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஆட்சியாளர்கள் மத்திய அரசிடம் கையேந்தி தான் இருக்க வேண்டும். தலைமைச் செயலாளர் நியமனம் முதல் டிஜிபி நியமனம் வரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும்.

ஆளுநருக்கும் யூனியன் பிரதேசத்தில் அதிகாரங்கள் இருக்கும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அங்கு பல் இருந்தும் எதையும் கடிக்க முடியாத நிலையில் தான் இருப்பார்கள். உதாரணம் புதுச்சேரி மற்றும் டெல்லி. இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் சட்டப்பேரவை இருக்கும், முதலமைச்சர்கள் இருப்பார்கள். ஆனால் நிதித்தேவைகளுக்கு புதுச்சேரி மத்திய அரசை சார்ந்திருக்க வேண்டும்.

புதுச்சேரியின் பட்ஜெட்டுக்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம். இதே போல் டெல்லியை எடுத்துக் கொண்டால் சட்டம் ஒழுங்கு நேரடியாக மத்திய அரசின் வசம் இருக்கும். இப்படி யூனியன் பிரதேசங்கள் தனி மாநிலங்கள் போல் தெரிந்தாலும் மத்திய அரசு மனது வைத்தால் தான் அங்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில் காஷ்மீரை நேரடியாக மத்திய அரசு நிர்வகிக்க இந்த யூனியன் பிரதேச ராஜதந்திரம் உதவும். அதோடு மட்டும் அல்லாமல் உள்துறை அமைச்சர் என்கிற வகையில் அமித் ஷாவின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் காஷ்மீர் வந்துவிடும். மேலும் அங்குள்ள போலீஸ் முதல் ராணுவம் வரை மத்திய அரசின் நிர்வாகத்தில் வருவதால் உள்ளூரில் தீவிரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறது பாஜக.

மேலும் தீவிரவாதிகளுக்கு உதவுபவர்கள், அவர்களின் ஆதரவாளர்களையும் களையெடுக்க இந்த புதிய நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ இதுநாள் வரை தனியாக இயங்கி வந்த காஷ்மீர் இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் நேரடியாக வந்துவிட்டது.