சசிகலாவை வரவேற்க 198 கோடி ரூபாயா..? உளவுத்துறை அறிக்கையால் அதிரும் மக்கள்

கொரோனா பெருந்தொற்று பலருடைய இயல்பு வாழ்க்கையை பாழாக்கியேவிட்டது. அதனால் ஆயிரம் ரூபாயைப் பார்க்கவே மக்கள் தடுமாறி வருகிறார்கள். ஆனால், இந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்த சசிகலாவுக்கு 198 கோடி ரூபாய் செலவழித்து கொண்டாட்டம் நடத்தப்பட்டதாக உளவுத் துறை தமிழக அரசுக்கு தகவல் கொடுத்திருக்கிறது. இதனை தினமலர் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது.


அதன்படி, பெங்களூரு - சென்னை தூரமான 420 கி.மீட்டரைக் கடப்பதற்காக 23 மணி நேரம் பயணித்துள்ளார் சசிகலா. வழி நெடுக, 120 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன. முன்கூட்டியே திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ள இந்த வரவேற்பு குறித்து, அரசுக்கு உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விபரம்:

சசிகலாவுக்கு, 100 இடங்களில் வரவேற்பு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது; ஆனால், 120 இடங்களில் வரவேற்பு கொடுத்துள்ளனர். பெங்களூரில் துவங்கி வழி நெடுக, லட்சக்கணக்கான 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டன

சசிகலா புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே, தமிழகத்தில் இருந்து, 500க்கும் அதிகமானோர், பெங்களூரு சென்று விட்டனர். அவர்களுக்கான ரூம் வாடகை, சாப்பாடு செலவு, போக்குவரத்து செலவுகள், அ.ம.மு.க., பிரமுகர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன. ஆயிரம் வரவேற்பு பேனர்கள் வைக்க திட்டமிடப்பட்டது; 942 பேனர்கள் வைக்கப்பட்டன. பெரும்பாலான பேனர்கள், பெங்களூரு மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டன

ஒவ்வொரு வரவேற்பு பாயின்ட்களிலும், 200 கார்கள் சேர்ந்துகொள்ள வேண்டும் என்பது திட்டம். அதாவது, 100 பாயின்டில் மொத்தம், 20 ஆயிரம் கார்கள் பங்கு பெற வேண்டும். அடுத்தடுத்த பாயின்ட்களில், கார்கள் விலகிக் கொள்ளலாம்; விருப்பம் இருந்தால் தொடரலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. டிவி' ஒளிபரப்பில், சென்னை வரை நூற்றுக்கணக்கான கார்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவேண்டும் என, உத்தரவு போட்டிருந்தனர்

சசிகலாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாக நாடு முழுதும் காட்ட, பெரும் தொகை ஒதுக்கப்பட்டது. வட மாநிலங்களில் பல்வேறு இணைய மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு ஊடகமும், இத்தனை மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று, 'டீல்' முடிக்கப்பட்டது

வரவேற்பு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும், 1,000 பேர் வீதம், 120 இடங்களில் ஏறத்தாழ, 1.20 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு பேட்டா மற்றும் சாப்பாட்டு செலவு என தலா, 1,800 ரூபாய் வீதம், 21.60 கோடி செலவிடப்பட்டது. ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும், 200 கார்கள் வீதம், 24 ஆயிரம் கார்கள்; அவற்றின் வாடகை, டிரைவர் பேட்டா செலவு, 20 கோடி. 942 பேனர்கள் வைக்க, 50 லட்சம் ரூபாய்; 10 லட்சம் போஸ்டர்களுக்கு, ஆறு கோடி

வழி நெடுக மேளம், டப்பாங்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வர குரூப் செலவு, 10 கோடி. தமிழகம் முழுக்க இருந்து, 50 பஸ்களில் ஆட்களை அழைத்து வந்தனர். அவர்களுக்கான பேட்டா மற்றும் சாப்பாட்டு செலவு, 12 கோடி; பஸ் வாடகை, 5 கோடி. வாண வேடிக்கை, பூ, மாலை உள்ளிட்ட இதர செலவுகள், 2 கோடி

பெங்களூருக்கு முன் கூட்டியே வந்து தங்கிய உறவினர்கள், நண்பர்கள், 500க்கும் அதிகமானோரின் லாட்ஜ் வாடகை, சாப்பாடு, போக்குவரத்து செலவு, 1 கோடி 23 மணி நேரம், வேறு நிகழ்ச்சிகள் இல்லாமல் தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பிய செலவு, 120 கோடி ரூபாய்.இப்படி, 23 மணி நேரத்தில், கிட்டத்தட்ட 198 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்துள்ளனராம். 

அடேங்கப்பா என்று வாய் பிளக்க வேண்டியதுதான்.