நீ எப்படி கோவிலுக்குள் வந்து சாமி கும்பிட லாம்? தலித் சிறுவன் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பயங்கரம்!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கோயிலுக்குள் சென்று வழிபட்டதால் உயர் ஜாதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் அவரை சரமாரியாக சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


என்னதான் ஜாதி பாகுபாடை அழிக்க வேண்டுமென பலரும் பாடுபட்டாலும் இன்றும் பல இடங்களில் ஜாதிக் கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஜாதி அடிப்படையாக கொண்டு கொலை ஒன்று செய்யப்பட்டுள்ளது. ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவர் உத்திரப் பிரதேசத்தில் விவசாயம் செய்துவருகிறார். ஏழை விவசாயியான இவருக்கு விகாஸ் குமார் ஜாதவ் என்ற மகன் இருந்தார். இவருக்கு வயது 17. இவர்கள் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுக்கப்பட்டதை மீறி தலித் சிறுவனான விகாஸ் குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிவன் கோவிலுக்குள் சென்று பிரார்த்தனை செய்து இருக்கிறார். தலித் சிறுவன் கோயிலுக்குள் சென்றதை பார்த்த அங்கிருந்த உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவரை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இருப்பினும் அந்த சிறுவன் அவர்களின் எதிர்ப்பை மீறி கோயிலுக்குள் சென்று வந்துள்ளான். கோயிலை விட்டு வெளியே வந்தவனை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று இரவு தனது வீட்டில் இருந்த விகாஸை தரதரவென வெளியே இழுத்து வந்து அவனது பெற்றோர் முன்பே உயர் சாதியை சேர்ந்தவர்கள் சரமாரியாக அந்த சிறுவனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். சம்பவம் பற்றி உயிரிழந்த சிறுவனின் தந்தையிடம் கேட்டபொழுது, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி எனது மகன் விகாஸ் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்தான். தாழ்ந்த ஜாதி ஆகிய நாங்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதை மீறி அவன் சென்று வந்ததால் அன்றைய தினமே மேல் ஜாதியை சேர்ந்த மக்கள் அனைவரும் அவனை அடித்துத் துன்புறுத்தினர்.

அப்போது இதுகுறித்து நாங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தோம். இருப்பினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருவேளை அன்றைய தினம் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய தினம் எங்களுடைய மகனை அவர்களால் கொலை செய்திருக்க முடியாது. சனிக்கிழமை அன்று வீட்டில் இருந்த எனது மகனை தரதரவென இழுத்து வந்து அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டனர் என்று கூறி கதறி இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.