ஒரே நாளில் 166 ஊழியர்கள் வேலை நீக்கம்..! முத்தூட் நிதி நிறுவனம் நடவடிக்கை! அதிர்ச்சி காரணம்!

எர்ணாகுளம்: முன் அறிவிப்பின்றி 166 ஊழியர்களை பணிநீக்கம் செய்த முத்தூட் ஃபைனான்ஸ்க்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது.


கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒரு பகுதியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீபத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். இதன்பேரில், அந்நிறுவனம் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்கள் தற்போது 52 நாள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் திடீரென முத்தூட் ஃபைனான்ஸ் தனக்குச் சொந்தமாக கேரளாவில் உள்ள 43 கிளைகளை மூடியுள்ளதோடு, அதில் பணிபுரிந்த 166 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.  

இதுதொடர்பாக எந்த முன் அறிவிப்பும் செய்யவில்லை எனவும், திடீரென ஊழியர்களுக்கு மொத்தமாக ஒரு மெயில் வந்தது என்றும், அதன்பின் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் சொற்பமான தொகை டெபாசிட் செய்யப்பட்டதாகவும், பிறகு அனைவரையும் பணிநீக்கம் செய்ததாகவும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, எர்ணாகுளத்தில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் தலைமை அலுவலகம் முன்பாக, பாதிக்கப்பட்ட ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சேர்ந்து கடந்த 6 நாட்களாக போராட்டம் செய்துவருகின்றனர். உரிய இழப்பீடு அல்லது வேலை கிடைக்காத வரை தங்களது போராட்டம் காலவரையின்றி தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  

சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 52 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்த ஊழியர்களை பழிவாங்கும் வகையிலேயே, இந்த திடீர் முடிவை முத்தூட் ஃபைனான்ஸ் செயல்படுத்தியுள்ளதாக, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.