மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற கார் கனரக லாரியின் பின்புறம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணிக்கு 120கி.மீ வேகம்! ஒரே குடும்பத்தின் ஏழு பேர் உயிரை குடித்த அவசரம்!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ரயில்வே காவல்துறை அதிகாரி மெல்வின் தேஷ்முக் என்பவர் தமிழகத்தில் இன்பச்சுற்றுலாவிற்கு வந்துள்ளார். ஒரு காரில் தனது தாய், தந்தை, இரண்டு குழந்தைகள், தனது மனைவி மற்றும் டிரைவருடன் அவர் தமிழகத்தை சுற்றி பார்த்து வந்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஆம்பூரை அடுத்த வெங்கிளி எனும் இடத்தில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்ற நிலையில் திடீரென டயர் வெடித்துள்ளது.
படுவேகத்தில் சென்ற போது டயர் வெடித்த காரணத்தினால் காரை டிரைவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேகமாக சென்ற கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிரமாண்ட லாரியின் பின்புறம் பலத்த வேகத்தில் மோதியது- அத்துடன் கார் லாரியின் அடியில் சென்று நசுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். கார் முற்றிலும் நசுங்கியிருந்த காரணத்தினால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்டு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.
அதிவேகம் ஆபத்தில் முடிவும் என்பதற்கு இந்த விபத்து உதாரணமாகியுள்ளது.