12 அடி நீளம்! வாயில் உயிருடன் பூனை! ஊத்தங்கரையை பீதியாக்கிய பிரமாண்ட மலைப்பாம்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிட்டு அவதிப்பட்டு வந்த பாம்பு பொதுமக்களால் மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பந்தல் காப்பு வனச்சரகத்தில் இருந்து இரையை தேடி மலைப்பாம்பு ஒன்று காரப்பட்டு கிராமத்திற்குள் ஊருக்குள் புகுந்தது. சுமார் 12 அடி நீளம் கொண்ட அந்த பாம்பு பெருமாள் கோயில் அருகே வந்து அங்கிருந்த பூனையை விழுங்கி உள்ளது.

பூனை விழுங்கியபின் செரிக்காமலும், நகரமுடியாமலும் சுமார் 3 மணிநேரம் அவதிப்பட்டு வந்த பாம்பை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் ஊத்தங்கரை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் விரைந்து வந்த வனகாப்பாளர் முனுசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் மாதப்பன், சிலம்பரசன் தலைமையிலான வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மலை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மலைப் பாம்பு மீட்கப்பட்டு ஊத்தங்கரை அடுத்த தண்ணீர் பந்தல் காப்பு காட்டில் விடப்பட்டது.