7 வயது சிறுமி கடத்தல்! தனி ஒருத்தியாக மீட்ட 11வயது சிறுமி! பரபரப்பு சம்பவம்!

கடத்தல் காரனிடம் இருந்து, 7 வயது சிறுமியை மீட்ட 11 வயது சிறுமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


மிசோரம் மாநிலத்தின் ஜூவாங்டுய் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த திங்களன்று தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு சிறுமி அங்கு வந்து தன்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள கெஞ்சியுள்ளார். அந்த சிறுமியை இதுவரை பார்த்திராத நிலையில், இருந்தாலும் சரி என்று விளையாட்டில் சேர்த்துக் கொண்டு அனைவரும் விளையாடியுள்ளனர்.

ஆனால், அதற்கடுத்த நாள் ஒரு போலீஸ் அதிகாரி அங்கே வந்தார். குறிப்பிட்ட 11 வயது சிறுமியிடம் ஒரு சிறுமியின் புகைப்படத்தை காட்டி, ''இந்த சிறுமியை காணவில்லை, நீ பார்த்தாயா'', என விசாரித்திருக்கிறார்.   அதற்கு அந்த சிறுமி, ''நேற்றுகூட என்னுடன் இவள் விளையாடினாள்,'' என பதில் கூறவே, போலீஸ் அதிகாரி, ''இந்த சிறுமி லுங்லிய் மாவட்டத்தைச் சேர்ந்தவள், ஒரு வாரமாகக் காணவில்லை, அவளை மீண்டும் பார்த்தால் தகவல் சொல்,'' என்று கூறிவிட்டுச் சென்றார். 

இதையடுத்து, அந்த சிறுமியை தனியாளாக தேடி கண்டுபிடிக்க, 11 வயது சிறுமி முடிவு செய்தார். இதன்பேரில், சாலைகளில் தேடிச் சென்ற அவர், ஓரிடத்தில் குறிப்பிட்ட 7 வயது சிறுமி, ஒரு நபரின் வீட்டில் இருப்பதை பார்த்திருக்கிறார். அது ஜோனுசாங்கின் ஃபினால் என்பவரின் வீடாகும். அங்கே மறைந்துகொண்ட சிறுமி, தகுந்த நேரம் பார்த்து திடீரென 7 வயது சிறுமியை கையை பிடித்து இழுத்துக் கொண்டு, தன் வீடு நோக்கி ஓடியுள்ளார்.

இதனைப் பார்த்த கடத்தல் கார பெண் மிரட்டினாலும், சிறுமிகள் 2 பேரும் நிற்காமல் ஓடியுள்ளனர். இறுதியாக, 11 வயது சிறுமியின் வீட்டை அடைந்தனர்.  அங்கு அவரது பெற்றோரிடம் விசயத்தை தெரிவிக்கவே, இதன்பேரில் போலீசாருக்கு தகவல் கூறப்பட்டது. அவர்கள் வந்து அந்த 7 வயது சிறுமியை மீட்டனர். 11 வயது சிறுமியின் வீரத்தை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.