ரத்தம் வருவது நிற்கவே இல்லை! சாலையில் சென்ற சிறுமிக்கு நேர்ந்ததை கூறி கதறி அழும் பாட்டி!

சென்னை ஐ.சி.எப்.பில் விறகு பொறுக்கச் சென்ற சிறுமி நாட்டு வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்தார்.


சென்னை ஐ.சி.எப், ராஜீவ்காந்திநகரைச் சேர்ந்தவர் அந்த 11 வயதுச் சிறுமி. பெற்றோர் இல்லாத நிலையில் பாட்டியில் அரவணைப்பில் வசித்து  வருகிறார். பாட்டி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் விறகு அடுப்பில் சமையல் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் சிறுமி ஈடுபட்ட போது வீட்டில் விறகு இல்லாதது தெரிய வந்தது. 

விறகு வாங்கக்கூட பணமில்லாத நிலையில் பாழடைந்த வீடு ஒன்றில் விறகு எடுப்பதற்காக சிறுமி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பயங்கர வெடிச்சத்தம் கேட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து பார்த்த போது அந்தச் சிறுமி தலையில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கிக் கிடந்தார். 

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய மக்கள் சிறுமியின் பாட்டிக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற வீட்டை ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்து மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

தனது பேத்தி விறகுக்கட்டையை எடுக்க அங்கிருந்த ஒரு கல்லை நகர்த்திப் போட்டதாகவும் அப்போது வெடிச் சத்தம் ஏற்பட்ட நிலையில் மயங்கியதாகவும் தெரிவித்ததாக சிறுமியின் பாட்டி தெரிவித்தார். எனினும் அதிர்ஷ்டவசமாக தலை மற்றும் கையில் காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். 

தேர்தல் நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளைப் பதுக்கியவர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்ப்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.