தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியது! சிறுமி பரிதாப பலி! விளையாட்டு விபரீதமானது!

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில், 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அஸ்வதி (11 வயது) பள்ளி விடுமுறை என்பதால், சென்னை ஐசிஎப் காலனியில் உள்ள தனது மாமா வினோத்குமாரின் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், வினோத்குமாரின் மகனுக்குக் காய்ச்சல் என்பதால், சிறுவனை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு, குடும்பத்தினருடன் சென்றுவிட்டார். வீட்டில் அஸ்வதி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதில், வீட்டை உள்பக்கமாக தாளிட்டுக் கொண்ட சிறுமி, விளையாடிக் கொண்டிருந்துள்ளார். எதிர்பாராவிதமாக, தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி அவர் உயிரிழந்துவிட்டார்.

இதற்கிடையே, அங்கு சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன் வந்துள்ளார். அவர் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த அவர், உள்ளே சிறுமி அசைவற்ற நிலையில், கழுத்து இறுகிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக, சிறுமியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, பெரம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஐசிஎஃப் போலீசார் விசாரிக்கின்றனர். கோடை விடுமுறைக்காக சென்னை வந்த சிறுமி, உயிரிழந்த சம்பவம், ஐசிஎப் காலனி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.