வகுப்பறையில் இருந்து திடீர் ஓட்டம்! மாடியில் இருந்து குதித்த 10ம் வகுப்பு மாணவி! இன்பன்ட் ஜீசஸ் பள்ளியில் பரபரப்பு!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இன்பன்ட் ஜீசஸ் எனும் தனியார் பள்ளி, காலாண்டு விடுமுறைக்கு பின் இன்று பள்ளி திறக்கப்பட்டது. அதேநாளில், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வின் மதிப்பெண்ணை காண்பிக்க பெற்றோர் -ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், திடீரென வகுப்பறையில் இருந்து வெளியே ஓடிவந்து பள்ளி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். எலும்புமுறிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதால், உயிருக்கு ஆபத்து இல்லை என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடந்ததாகவும், அதில் மாணவியின் பெற்றோர் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 

வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி, காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்களை எடுத்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.