ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் விநியோகம் தொடங்கியது!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 1000 மற்றும் இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் திட்டம் இன்றுமுதல் தொடங்கியிருக்கிறது.


கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. தற்போது இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுப்பதற்காக நம்முடைய மத்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து நாட்டு மக்களை வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க தேவையான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

ஊரடங்கு உத்தரவால் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் பொது மக்களின் பொருளாதார தேவைக்காக தமிழக அரசு ரூபாய். 1000 மற்றும் விலை இல்லாமல் அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இன்னிலையில் இந்த பொருட்களை வழங்குவதற்கான டோக்கன் கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வந்தது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் 1000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. டோக்கன்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் முறையாக வரிசையில் அரசு குறிப்பிட்ட சமூக விலகலை பின்பற்றி இந்தப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிவாரண பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.