கைகளில் 2 சொட்டு சானிடைசர் தெளிக்க ரூ.100 பில் போட்ட ஏஆர்சி கருத்தரிப்பு மருத்துவமனை! பரிசோதனைக்கு சென்ற கர்ப்பிணிக்கு அதிர்ச்சி!

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவமனையில் நுழையும் போது சானிடைசர் தெளித்ததற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஏ ஆர் சி கருத்தரிப்பு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் நுழையும் பொழுது அவர்களின் கையில் சானிடைசர் தெளிக்கப்பட்டுள்ளது. மருத்துவரை ஆலோசனை செய்வதற்காக 300 ரூபாயும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கைகளில் சானிடைசர் தெளிப்பதற்கு 100 ரூபாயும் கட்டணமாக அவர்களிடத்தில் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டதற்கு அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். மருத்துவமனைக்குள் நுழையும் போது கைகளில் சானிடைசர் தெளித்ததற்கு நூறு ரூபாய் கட்டணம் வாங்கிய சம்பவம் தீயாக பரவி அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பாக இதுபற்றி பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியபோது கட்டணம் வசூல் செய்யப் பட்டது உண்மைதான். ஆனால் தற்போது அதுபோல கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.