டிவி சீரியலில் வந்த விபரீத காட்சி! பார்த்த 11 வயது சிறுமி எடுத்த பகீர் முடிவு!

டி.வி. தொடரில் வந்த தற்கொலைக் காட்சியப் பார்த்து அதே போன்று நடித்த 11 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.


பெங்களூருவின் மல்லசந்த்ரா என்ற இடத்தைச் சேர்ந்த சிறுமி பூஜா 5-ஆம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று பூஜாவின் பெற்றோர் அவளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவளது தம்பியுடன் வெளியில் சென்றிருந்தனர். இந்நிலையில் இரவு 9.30 மணிக்கு அவர்கள் வீடு திரும்பிய போது சுவற்றில் ஹாங்கர் மாட்டும் கொக்கியில் துண்டால் தூக்கிட்ட நிலையில் பூஜாவைக் கண்டனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பூஜா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இரவு 8 மணியளவில் பூஜா கடைக்குச் சென்று இரவு உணவுக்காக தயிர் வாங்கி வந்ததாக அக்கம்ப் பக்கத்தினர் தெரிவித்தனர்.

பிறகு அந்தச் சிறுமி தொலைகாட்சியில் தொடர் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கூறினர். இந்நிலையில் சூழல் மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் சிறுமி பூஜா தொலைக்காட்சித் தொடரில் தற்கொலைக் காட்சியை பார்த்திருக்கக் கூடும் என்றும், அதை விளையாட்டாக நடித்துப் பார்த்திருக்கவும் அப்போது மரணம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.