சாக்லேட் கொடுத்து கடத்த முயன்ற இளைஞன்! 5ம் வகுப்பு சிறுமி செய்த தரமான சம்பவம்! குவியும் பாராட்டு!

சென்னை,புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வரும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர் பள்ளி நேரம் முடிந்து வெளியில் வந்துள்ளார்.


அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் சிறுமியிடம் அவர் தாய்க்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். அதன் பின் சட்டென்று சுதாரித்துக்  கொண்ட சிறுமி பள்ளிக்குள் சென்று ஆசிரியர் ஒருவரிடம்  இந்த தகவலை  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் வெளியில் வந்து பார்வையிட்ட போது   அந்த இளைஞன்   சாக்லேட் கொடுத்த நிலையில்  மற்றொரு  குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான். இதனை தொடர்ந்து ஆசிரியர் அவனை விசாரிக்க முயற்சித்த  போது தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவனை  விரட்டிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இளைஞனை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நடத்தப்பட்ட  முதற்கட்ட விசாரணையில் அவன் பெயர் லிப்புதாஸ் என்றும்,  அவன்  பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்றும் தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து அவன் பின்னணியில் குழந்தை கடத்தல் கும்பல் உள்ளதா?  என்பது குறித்து காவல்துறையினர் அடுத்த கட்ட  விசாரணையை  மேற்கொண்டு  வருகின்றன. முகம் தெரியாத நபர் வந்து அழைத்ததும்  சிறுமி சுதாரிப்புடன்  செயல்பட்டதால் கடத்தல்காரனை பிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் சிறுமியை  பாராட்டியுள்ளனர்.