காவிரியின் பெயரைச் சொல்லி 10 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையா? ஜக்கி வாசுதேவை சுழலும் கிடுகிடு குற்றச்சாட்டு!

காவிரி காலிங் என்கிற ஆங்கில வாக்கியத்தை காவிரி கூக்குரல் என்று மொழிபெயர்த்த நேரம், காவிரியின் பெயரைச் சொல்லி பத்தாயிரம் கோடி ரூபாய் அடிக்க பார்க்கிறார் சத்குரு என்று கூக்குரல்கள் கேட்கத் தொடங்கி விட்டன.


பெங்களூர் கோர்ட்டில் எ.வி அமர்நாத் என்கிற வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல வழக்கில், கர்நாடக அரசு மற்றும் ஜக்கிவாசு தேவ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சில முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. கர்நாடக அரசு காவிரிக் கரைகளில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் மரங்களை நட அனுமதிக்கப் போகிறதா?

அப்படி மரங்கள் நடுவதற்கு அந்த நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டலாமா? என்று கேட்கப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த திம்மக்கா, அஸ்ஸாமைச் சேர்ந்த ஜாதவ் ஆகியோர் தங்களது சொந்த உழைப்பில் மரம் நட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதில் இன்னும் நிறையக் கேள்விகள் எழுகின்றன. ஒரு மரக்கன்றுக்கு 42 ரூபாய் கேட்கிறார் ஜக்கி. மொத்தம் 253 கோடி மரங்களை நடப்போவதாகச் சொல்கிறார். 253×42 என்றால் 10,626 கோடிக்கு குறிவைக்கிறார் குரு.

இந்த இடத்தில் ஒரு அடிப்படையான சந்தேகம் எழுகிறது. தலைக்காவிரியில் இருந்து, பூம்புகார் வரை ஓடும் காவிரியின் நீளம் சுமார் 800 கிலோ மீட்டர்தான். அதில் சுமார் நூறு கி.மீ தூரம் தமிழக,கர்நாடக எல்லையில் உள்ள அடர்ந்த காடுகள் வழியே ஓடுகிறது. அதிகம் போனால் 700 கி.மீ தான் காவிரிக்கரை. இரண்டு கரைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் 1400 கி.மீ தான் மொத்தமே.

இந்த 1400 கி.மீ தூரத்துக்குள் எப்படி 253 கோடி மரங்களை நடமுடியும். ஒரு சதுரக் கிலோமீட்டரில் ஒரு லட்சம் மரங்கள் வரை நடலாம் என்று வைத்துக்கொண்டால் 14 கோடி மரங்கள் தானே வைக்க முடியும். ஈஷா சொல்கிறபடி 253 கோடி மரங்களை நட்டால், ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 16 லட்சம் மரங்கள் கணக்கு வருகிறதே, இது காரிய சாத்தியமா. இதன் பின்னால் இருக்கும் திட்டம் என்ன?

ஈரோடு,மற்றும் தஞ்சை மாவட்டங்களில் கரையை ஒட்டியே விளை நிலங்கள் இருக்கும் நிலையில் அங்கே மரம் நடுவது சாத்தியாமா? ஈஷா நிறைய ஆய்வுகள் செய்ததாகச் சொல்கிறதே அந்த ஆய்வுகளை, தமிழ்நாடு , கர்நாடக அரசுகள் பரிசீலித்தனவா என்று நீளும் கேள்விகளுக்கு பதில் வரும் வரை இது பலரின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் திட்டம் என்பது போன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க முடியாது.

பாபா ராம்தேவுக்கு கூடத் தனது பதஞ்சலி நிறுவனத்தை 10ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனமாக்க சில ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் ஜக்கி வாசுதேவ் மரக்கன்றுகள் விற்றே பத்தாயிரம் கோடி பார்த்து விடுவார் போலதான் இருக்கிறது கள நிலவரம்.