ஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ.5! சுற்றுச் சூழலை பாதுகாக்க அசர வைக்கும் அற்புத திட்டம்!

சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக் பொருட்களை படிப்படியாக தற்போதிலிருந்தே அழித்தால்தான் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சுகாதாரமான உலகை விட்டுச் செல்லமுடியும் என்ற நிலை உள்ளது.


எனவே அதன் அடிப்படையில்தான் உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1 2019 முதல் தடை விதித்து 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களும் அரசாங்க உத்தரவை பின்பற்றும் வகையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு தற்போது துணிப்பையும் டீ, காபி, ஜூஸ் போன்றவை வாங்க வீட்டில் இருந்து பாத்திரங்கள் எடுத்து செல்லவும். தொடங்கி உள்ளனர். இதனால் துணிப்பை வியாபாரிகளின் வாழ்விலும் தற்போது ஒளிவீசத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவியும் உதகை, குன்னூர் உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதை முற்றிலும் ஒழிக்க புது முயற்சி மேற்கொண்டுள்ளது அந்த மாவட்ட நிர்வாகம். 

அதாவது பரலியாறு, குன்னூர், உதகை, கூடலூர் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் ஐந்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் தண்ணீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களால் மலை வாசஸ்தலம் மாசடைந்து வருவதாகவும் இதை கட்டுப்படுத்த ஏடிஎம் எனப்படும் தானியங்கி குடிநீர் இயந்திரம் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த இயந்திரத்தில் ரூ.5 காயினை செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் வரும் என தெரிவித்த அவர்கள் ஒரே பாட்டிலை பயன்படுத்தி பலமுறை தண்ணீர் பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். இது பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், வன ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதெல்லாம் சரி. பொதுவாக சுற்றுலாத் தளங்களுக்கு சென்றாலே எது வாங்கினாலும் ரூ.20க்கு குறையாமல் இருக்கும் நிலையில் ஐந்து ரூபாய் காயின் தாராளமாக கிடைக்குமா என்று சுற்றுலாப் பயணிகள் கேட்கும் கேள்விக்கு விடைதான் இங்கில்லை.