அடுத்த அமைச்சரை சுட்டுக் கொன்னுட்டாங்களேப்பா..! விகாஸை சுட்டுக் கொன்றது தமிழக அதிகாரியாமே..!

உ.பி.யில் அட்டூழியம் செய்த விகாஸ் துபேயவை போலீஸ் கைது செய்யாது, அப்படியே செய்தாலும் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொன்றுவிடும் என்று கைக்குழந்தைக்குக் கூட தெரியும். அப்படியேதான் நடந்தும் கொண்டது உ.பி. காவல் துறை.


”ம.பி.ல இருந்து உ.பி.க்கு ஒரு கார்ல கூட்டினு வந்தோம். வழில ரோடு மோசமா இருந்துச்சா.. மழ தண்ணீல ஸ்கிட் ஆகி வண்டி கவுந்துருச்சு. போலீஸ்லாம் எழுந்திரிக்றதுக்குள்ள விகாஸ் ஒரு துப்பாக்கிய புடுங்கி சுட்டுகிட்டே தப்பி ஓட்னான். தற்காப்புக்கு போலீஸ் சுட்டதுல விகாஸ் செத்துட்டான்”னு ஐஜி சொல்றார். 

அவன் எந்தக் கட்சியைச் சேர்ந்தவன் என்பதில் பல்வேறு குளறுபடிகள். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பா.ஜ.க. என்று பல்வேறு கட்சியைச் சொல்கிறார்கள். காரணம் என்னவென்றால், எல்லா தலைவர்களுக்கும் உதவிகரமாக இருந்துள்ளான். இந்த துப்பாக்கி சூடு நடக்கவில்லை என்றால், அடுத்த தேர்தலில் நின்று வெற்றிபெற்று அமைச்சராகி இருப்பான்.

இவனை சுட்டுக்கொன்றது ஒரு தமிழன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆம், உத்தரப்பிரதேசத்தை கலக்கிய ரவுடி விகாஸ் துபேவை என்கவுண்ட்டரில் முடித்த பெருமைக்குரியவர் தமிழகத்தைச் சேர்ந்த கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார். 

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கோவில் ஒன்றில் பதுங்கியிருந்த விகாஸ் துபேவை சுற்றி வளைத்து தூக்கியது போலீஸ். அதேநேரத்தில் கான்பூரில் விகாஸ் துபேவின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும் தூக்கி சிறையில் அடைத்தது போலீஸ். இரவோடு இரவாக ம.பி.யில் இருந்து விகாஸ் துபேவுடன் புறப்பட்டது போலீஸ் டீம்.

மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விகாஸ் துபேவுடன் வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்ற விகாஸ் துபே, என்கவுண்ட்டரில் பலியானார். இந்த என்கவுண்ட்டரை வெற்றிகரமாக நிகழ்த்தியது எஸ்.பி தினேஷ்குமார், தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர்.

பி.எஸ்.சி. அக்ரி படிப்பை முடித்து ஐ.பி.எஸ். அதிகாரியான தினேஷ்குமார், 2009-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த 33 வயதான இளம் அதிகாரி. விகாஸ் துபே என்கவுண்ட்டர் மூலம் நிஜ வீரனாக உயர்ந்து நிற்கிறார் தினேஷ்குமார். அதே நேரம் இவனை சட்டத்தின் முன்பு நிறுத்தியிருந்தால், அவனுக்குப் பின்னே இருந்த அத்தனை தலைகளையும் பிடித்திருக்க முடியுமே என்ற ஆதங்கமும் கேட்கத்தான் செய்கிறது.