வன்னியர்களை வளைக்கும் ஸ்டாலினை டென்ஷனாக்கிய ராமதாஸ்! பதிலடி கொடுக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

விக்கிரவாண்டியில் உள்ள வன்னியர் ஓட்டுக்களை எப்படியும் வளைக்கவேண்டும் என்ற நோக்கத்தில், நேற்று வன்னியர்களுக்கு தி.மு.க. அரசு என்னவெல்லாம் செய்தது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பட்டியல் இட்டிருந்தார்.


அந்த விவகாரம் ராமதாஸை கடுமையாக டென்ஷனாக்கிவிட்டது. ஏனென்றால் வன்னியர் என்றாலே ராமதாஸ் மட்டும்தான் என்று அவர் நிலைநிறுத்தும் பிம்பத்தை உடைத்துத்தள்ளியது அந்த அறிக்கை. அதனால், ஸ்டாலின் சொல்வதைக் கேட்டு ஏமாறும் தி.மு.க. தொண்டர் அல்ல வன்னியர்கள் என்று காட்டமாக ஓர் அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார்.

உடனே ராமதாஸ்க்கு சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார் தி.மு.க. வன்னியரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. “தன்னையும், தனது மகனையும் சிறையில் அடைத்து, வன்னியர் சமுதாயத்தை கேலியும் கிண்டலும் பேசிய அதிமுகவிற்கு வக்காலத்து வாங்கி, எங்கள் கழகத் தலைவரை விமர்சித்துள்ள மருத்துவரய்யா திரு ராமதாஸ் அவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவரய்யா அவர்களுக்கு தி.மு.க.வின் மீது வந்த திடீர் கோபம் என்ன? “நமக்கு அடிமையாகக் கிடந்த வன்னியர் பெருமக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கலெக்டர்களாகவும், எஸ்.பி.களாகவும், க்ரூப்-1 அதிகாரிகளாகவும், டாக்டர்கள், எஞ்சினியர்களாகவும் ஆக்கி விட்டாரே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்’’ என்ற கோபமா?

“காடுவெட்டி குருவை ஒரு முறைக்கு பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிடலைத்த அதிமுகவிற்குப் பதில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னியர் சமுதாயத்தினர் மீது பதிவு செய்த வழக்குகளை எல்லாம் தி.மு.க. ஆட்சி ரத்து செய்து விட்டதே’’ என்ற கோபமா? “வன்னியர் சமுதாயத்தின் தன்னிகரில்லாத் தலைவர்கள் திரு எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாருக்கு முழு உருவச் சிலை வைத்து, இப்போது திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று அறிவித்து,

தான் மட்டுமே வன்னியர் சமுதாயத் தலைவர் என்று உருவாக்கிய தோற்றத்தை உடைத்து விட்டார்களே’’ என்ற கோபமா? “இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வன்னிய சமுதாய இளைஞர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்ததில் கோபமா? என்று கேட்க விரும்புகிறேன்.

மருத்துவரய்யா கோபப்படும் அளவிற்கு எங்கள் கழகத் தலைவர் என்ன சொல்லி விட்டார்? தி.மு.க. ஆட்சியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கினார். போராட்டமே செய்யாமல் ஆலிவர் ரோட்டிற்கு டாக்டர் அய்யாவை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்கியதை சொன்னார். வன்னியர் சமுதாய அதிகாரிகளை கல்வித்துறையிலும், காவல்துறையிலும் உயர் பதவியில் வைத்து அழகு பார்த்ததைச் சொன்னார்.

வன்னியர் சமுதாயப் பெருமைகளை பேசியதற்காக மருத்துவய்யா இப்படி கோபித்து- கொந்தளிப்பது ஏன்? தன்னை ஜெயிலில் போட்டவர்களுக்கும்- உடல்நிலை குன்றிப் போன நிலையிலும் அண்ணன் காடு வெட்டி குருவை அங்கும் இங்கும் பழுதான போலீஸ் வேனில் இழுக்கடித்தாரே - அந்த அதிமுகவிற்கு ஆதரவு திரட்டவா? “ஒவ்வொரு நீதிமன்றமாக அலைகழிப்பதற்கு பதில் என்னை ஒரே விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள்” என்று ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் கதறினாரே அண்ணன் காடுவெட்டி,

அந்த அதிமுக ஆட்சிக்கு ஆதரவு திரட்டவா? அல்லது, உங்களையும், குருவையும் கொடுமைப்படுத்திய அதிமுகவுடன் வைத்துள்ள கூட்டணி பாசமும், தைலாபுர விருந்தின் “மகத்துவமும்தான்’’ இந்த கொந்தளிப்பிற்கு காரணம் என்றால் அதற்கு எங்கள் கழகத் தலைவர் பொறுப்பாக முடியாது.

அதிமுகவிற்கு விருந்து வையுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படி விருந்து வைத்ததற்காக வன்னியர் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க.வை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களை மட்டுமின்றி - பா.ம.க. நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் போட்டு நீதிமன்றங்களின் படிகட்டுக்களில் இன்றைக்கும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்திய அதிமுகவிற்கு சாமரம் வீசுங்கள்.

ஆனால் உங்கள் மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க.வை வம்புக்கு இழுக்காதீர்கள். ஆனால், சமூக நீதிக்காக போராடிய மருத்துவரய்யா அவர்கள் இன்றைக்கு யார் யாருக்கு எல்லாம் காவடி தூக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் என்பதைப் பார்க்கும் போது என்னைப் போன்றோருக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

“உங்களின் சொந்த லாபத்திற்காக எங்களை அடகு வைத்தது போதும்’’ என்று வன்னியர் சமுதாய மக்கள் என்றைக்கோ உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டார்கள். தி.மு.க.வை கூட்டணியை விட்டு சென்றதில் இருந்து தோல்வி மேல் தோல்வியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் அருமைப் புதல்வரை தர்மபுரியில் தோற்கடிக்கப்பட்டபோதே பாராளுமன்றத் தேர்தலில் தங்களது பொருந்தாக் கூட்டணிக்கு வன்னியர் சமுதாயம் தக்க பதிலடி தந்து விட்டது.

இன்னொரு பதிலடி விக்ரவாண்டி தொகுதியில் கிடைக்கப் போகிறது. அதனால்தான் இப்போது தி.மு.க.வின் மீது வன்னியர் சமுதாயத்திற்கு இருக்கும் பற்றுதலை உடைக்க ஏதோ பழங்கதைகளை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்.

எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் “போராட்டங்கள்’’ ஏதுமின்றி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அளித்தவர். வன்னியர் சமுதாயத்தின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக தினம் தினம் யோசித்து ஆட்சியிலிருந்த போதெல்லாம் அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர்.

அதை வேண்டுமென்றால்- ஒரு தனி மேடையில் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஒரு வேளை நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் அருமைப் புதல்வரை அனுப்பி வையுங்கள். வன்னியர் சமுதாயத்திற்கு நன்மை செய்தது அதிமுகவா அல்லது தி.மு.க.வா என்று ஒரு விவாதத்தை நடத்திப் பார்ப்போம்.

என்னைப் போன்று எத்தனையோ வன்னிய சமுதாயத்தினரை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக - ஏன் மத்திய அமைச்சராக உயர் பதவியில் பார்த்து அழகு பார்த்தவர் எங்கள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். திரு ஏ.ஜி. அவர்கள் உங்களுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர்.

அவருக்கு பெருமை சேர்க்க எங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அது பற்றி இதுவரை தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்த காலத்திலாவது நீங்கள் வாய் திறந்து கேட்டதுண்டா? ஏனென்றால் இந்த சமுதாயத்தில் வேறு யாருக்கும் சிறப்பு சேர்ப்பது தங்களுக்குப் பிடிக்காது. அதற்காக தி.மு.க. பொறுப்பாக முடியாது.

கட்சி துவங்கியதில் இருந்து தாங்கள் தனது குடும்பத்திற்காக மட்டுமே கூட்டணி வைத்ததை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். தனது குடும்பத்திற்காகவே ராஜ்ய சபை பதவி கேட்டுப் பெற்றதை நினைவில் வைத்துள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில் தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே வைத்த கூட்டணிகளை ஞாபகத்தில் இந்த சமுதாயம் வைத்திருக்கிறது. தங்களைப் பற்றியும் - தாங்கள் இந்த வன்னியர் சமுதாயத்தைப் பயன்படுத்தியது பற்றியும் வெளிவந்த புத்தகங்கள் இன்னும் என் அலமாறியில்தான் இருக்கின்றன.

உங்கள் அருமை புதல்வரை 2016-ல் முதல்வராக்க முயற்சித்து தோற்று நிற்கின்ற விரத்தியில் தங்களுக்கு பொருந்திய பழமொழியை எங்கள் கழகத் தலைவர் பக்கம் தயவு செய்து திருப்பி விடாதீர்கள். அதை நான் திருப்பிச் சொன்னால் டாக்டர் கலைஞர் அவர்கள் எங்களுக்கு கற்றுத் தந்த பண்பாட்டிலிருந்து தவறுவதாகும். அதற்கு மாறாக வேறு பழமொழியை உங்களுக்கு நான் சொன்னாலும் எங்கள் கழகத் தலைவர் கற்றுத் தந்துள்ள நாகரீகத்திற்கு புறம்பானதாகும்.

ஆகவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் போவது நிச்சயம். அது கனவல்ல- நிஜம். அப்போது தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் எப்படி வன்னியர் சமுதாயத்திற்காக பல்வேறு அரிய சாதனைகளை செய்தாரோ, அதே போல் பல சாதனைகளை மட்டுமின்றி- அறிக்கை வாயிலாக கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி- வன்னியர் சமுதாயத்திற்கு எங்கள் கழகத் தலைவர் பெருமை சேர்ப்பார்.

அந்த காட்சிகளை நீங்களும் காண்பீர்கள்! அப்போது நீங்கள் உணர மறுத்தாலும்- வன்னியர் சமுதாயப் பெருமக்கள் நன்கு உணருவார்கள் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.